எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பீட்டர் சின்கட்டுரைகள்

நல்ல கனியை கொடுப்பது

விமானத்தின் ஜன்னல் வழியாக நான் பார்த்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வறண்டு கிடந்த இரண்டு மலைகளுக்கு நடுவே ஓர் குறுகிய நாடா போன்று வளர்ந்திருந்த கோதுமை வயல்களையும், பழத்தோட்டங்களையும் கண்டேன். பள்ளதாக்கின் நடுவே ஓர் நதி ஓடியது. ஜீவனைத் தரும் நதியில்லாமல் எந்த கனியும் அங்கு உண்டாகியிருக்க முடியாது.

நிறைவான அறுவடைக்கு எப்படி சுத்தமான தண்ணீர் ஆதாரமாக இருக்கிறதோ, அதைப் போலவே என்னுடைய வாழ்வில் வெளிப்படும் என் வார்த்தை, செயல், மற்றும் அணுகுமுறை என்னும் “கனி”யின் தரமானது என்னுடைய ஆவிக்குரிய போஷாக்கினால்தான் உண்டாகுகிறது. சங்கீதக்காரன் சங்கீதம் 1ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனிதன்... நீர்க் கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தருபவனாக இருப்பான்” என்று கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என்று ஆவியானவருடன் சேர்ந்து நடப்பவரை பற்றி பவுல் கலாத்தியர் 5ல் குறிப்பிட்டுள்ளார் (வச. 22-23).

சில நேரங்களில் நான் சூழ்நிலைகளைப் பார்க்கும் விதம் சரியில்லாமலிருக்கிறது அல்லது என் சொற்களிலும், செயல்களிலும் தொடர்ந்து அன்பற்ற தன்மையே வெளிப்படுகிறது. தேவனுடைய பிரசன்னத்திலும், அவருடைய வார்த்தையிலும் நேரத்தை செலவிட தவறியதால்தான், நான் நல்ல கனியைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எப்பொழுதெல்லாம் நான் தேவனைச் சார்ந்து, அவருக்குள் வேர் கொண்டு நிலைத்து நின்றேனோ, அப்பொழுதெல்லாம் நல்ல கனியை கொடுத்தேன். அப்பொழுது மற்றவர்களுடன் நான் பழகியபோது, பொறுமையும், இரக்கமும் என் குணாதிசயமாக வெளிப்பட்டது. மேலும் குறைகூறுவதை தவிர்த்து, நன்றியுள்ள நிலைப்பாட்டை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது.

தம்மையே நம்மிடத்தில் வெளிப்படுத்தியிருக்கும் தேவனே நமது வலிமை, ஞானம், மகிழ்ச்சி, புரிதல் மற்றும் அமைதியின் ஊற்றாக இருக்கின்றார் (சங். 119:28, 98, 111, 144, 165). அவருக்கு நேராக நம்மை நடத்தும் வார்த்தைக்குள் நமது ஆத்துமாவைப் புதைத்துக்கொண்டால், ஆவியானவர் நம் வாழ்வில் செய்யும் வேலை தெளிவாக வெளிப்படும்.